புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் கொரோனா பரவும் அபாயம்


புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 5 May 2020 3:36 AM IST (Updated: 5 May 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அனைத்துத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலர் வெளியூர்களில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு அரசு பஸ்களும், புதுச்சேரிக்கு 2 அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரே பஸ்சில் 100 ஊழியர்கள்

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் நேற்று காலை ஒரேயொரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் விழுப்புரத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வரக்கூடிய ஊழியர்கள் அனைவரும் அந்த பஸ்சிலேயே பயணம் செய்தனர். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒரே பஸ்சில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் மிகுந்த இட நெருக்கடியில் பயணம் செய்தது ஒருபுறம் இருந்தாலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிற சூழலில் அரசு ஊழியர்களால் ஒரே பஸ்சில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.

சமூக தொற்று

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி வருகிற நிலையில் நேற்று பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் கூட்டநெரிசலில் பயணம் செய்த அரசு ஊழியர்களால் கொரோனா வைரஸ் சமூக பரவலாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊழியர்களை அழைத்து வர கூடுதல் பஸ்களை இயக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.


Next Story