மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது: வீட்டில் இருந்து தரிசித்த பக்தர்கள்


மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது: வீட்டில் இருந்து தரிசித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 5 May 2020 12:15 AM GMT (Updated: 4 May 2020 10:12 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. வீட்டில் இருந்தே இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசித்தனர். மேலும் பெண்கள் புதிய மங்கலநாண் சூடிக்கொண்டனர்.

மதுரை, 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (6-ந் தேதி) தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த அரசு அனுமதி வழங்கியது.

இதையொட்டி நேற்று கோவிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உற்சவர் சன்னதியில் இருக்கும் திருவாட்சியில் உள்ள 108 விளக்குகள் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். பச்சை பட்டு உடுத்தி காட்சி தந்தார். வைரகிரீடம் சூடி, மரகத மூக்குத்தி, வைர மாலை மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன. சுந்தரேசுவர பெருமான் வெண் பட்டும், பிரியாவிடை சிவப்பு பட்டும் உடுத்தி மணமேடையில் எழுந்தருளினர்.

சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள்

அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் தொடங்கின. மணமகள் மீனாட்சியாக உக்கிரபாண்டி பட்டர் வழி சிவாச்சாரியார் ராஜா என்ற சந்திரசேகர் பட்டரும், சுந்தரேசுவரராக குலசேகர பட்டர் வழி சிவாச்சாரியார் செந்தில் பட்டரும் இருந்தனர்.

மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை கலாஸ்பட்டர் செய்தார். அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் சுந்தரேசுவரர் பிரதிநிதியாக செந்தில் பட்டரும், மீனாட்சியின் பிரதிநிதியாக ராஜா பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். சுந்தரேசுவரருக்கு வெண் பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டு புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை பட்டர்கள் காண்பித்தார்கள்.

திருக்கல்யாணம் நடந்தது

அதை தொடர்ந்து காலை 9.20 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை கமிஷனர் நடராஜன், பட்டர்கள் என 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை காண்பதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

மங்கல நாண் அணிந்த பெண்கள்

ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது பெண்கள், புதிய மங்கல நாண்களை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெண்கள் அனைவரும் வீட்டிலேயே புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமியின் பிரதிநிதியாக இருந்த பட்டர்களை மேள தாளம் முழங்க யானை மீது ஏற்றி அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் நேற்று ராஜா, செந்தில் பட்டர்கள் இருவரும் நடந்தே தங்களது இல்லத்திற்கு சென்றனர்.

போலீஸ் குவிப்பு

திருக்கல்யாணத்தையொட்டி மீனாட்சி கோவிலுக்கு வெளியே சித்திரை வீதியில் இருந்து மாசி வீதி வரை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்கள் யாரும் கோவில் பகுதிக்கு செல்லாதவாறு தடுப்பு அமைத்திருந்தனர். அதனையும் மீறி சிலர் திருக்கல்யாணத்தை காண்பதற்காக கோவிலை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மணக்கோலத்தில் மீனாட்சியை காண முடியாத வருத்தத்தில் பல பக்தர்கள் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

இறைவன் திருவிளையாடல்

திருக்கல்யாணத்தில் மீனாட்சியின் பிரதிநிதியாக இருந்த ராஜா பட்டர் கூறும் போது, “இறைவனை காண நாம் கோவிலுக்கு செல்வோம். ஆனால் இறைவனே அனைத்து ஜீவராசிகளையும் நேரில் சென்று, காட்சி கொடுத்து 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம்தான் மதுரை. எனவே சொக்கநாதர் என்ன நினைக்கிறாரோ அது தான் தற்போது நடந்து உள்ளது. அவர் ஏன் நினைக்கிறார், என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் சுவாமியை பற்றி புரிந்து கொண்டவர்களுக்கு அவரது திருவுள்ளப்படி இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார். எனவே இதுவும் அவரின் திருவிளையாடலே. மேலும் கடந்தாண்டு நடந்த சடங்குகள் போன்றுதான் இந்தாண்டும் திருக்கல்யாண சடங்குகள் நடத்தப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இனி இது போன்ற கொடிய நோய்கள் வராமல் அனைத்து ஜீவராசிகளையும் காக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி பூஜை செய்தோம்” என்றார்.

Next Story