கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்தி கலெக்டர் நடவடிக்கை


கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்தி கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 12:41 AM GMT (Updated: 5 May 2020 12:41 AM GMT)

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்்திற்கு 7 பேர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரில் கொரோனா தொற்று நடமாடும் பரிசோதனை மையத்தினை கலெக்டர் வீரராகவராவ், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன்பின்னர் நோய்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 566 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 21 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 545 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. ஒரு பரிசோதனை முடிவு நிலுவையில் உள்ளது.

இதுதவிர, நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட 76 பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு இனி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலேயே பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். நோய்்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் வரவோ, அந்த பகுதிகளுக்குள் யாரும் செல்லவோ கூடாது. தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு பெற்ற பகுதி கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது. மற்ற எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது. திறக்கப்படும் கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம், கைகழுவும் முறையை கடைபிடித்து நோய் பரவாமல் தற்காத்து கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 7 பேர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி்களை கடந்து கள்ளத்தனமாக இதுவரை 311 பேர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story