கோவையில் இருந்து அவினாசி நோக்கி வந்த ராஜஸ்தானை சேர்ந்த 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்


கோவையில் இருந்து அவினாசி நோக்கி வந்த ராஜஸ்தானை சேர்ந்த 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 5 May 2020 7:15 PM GMT (Updated: 5 May 2020 5:13 PM GMT)

கோவையில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவினாசி, 

வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், அவினாசி, பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் யாரும் ஒரு ஊரில் இருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திற்கு செல்ல அனுமதியில்லை.

இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் அவினாசி நோக்கி வந்தனர். அப்போது அவினாசியை அடுத்து தெக்கலூர் சோதனைச்சாவடி அருகே வந்தபோது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது வேலை ஏதும் இல்லாததால் தங்களது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவினாசி போலீசார், சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிங்காநல்லூர் போலீசார், தெக்கலூர் வந்து ராஜஸ்தான் செல்ல இருந்த 8 பேரையும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுடன் ஒரு டெம்போவில் ஏற்றிச்சென்றனர்.

அவினாசி-ஈரோடு பைபாஸ் சாலையில் அவினாசி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து அந்த வழியாக சைக்கிள்களில் வந்த 6 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 

அப்போது அவர்கள் கூறும் போது, கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்றும், கோவை சின்னியம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும், ஊரடங்கு உத்தரவால் வேலை இன்றி அவதிப்பட்டதாகவும், வீட்டு வாடகை கேட்டதால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளில் வந்ததாகவும் தெரிவித்தனர். 4 நாட்களுக்கு தேவையான சப்பாத்தி, தண்ணீர், சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் பொருட்களையும் வைத்திருந்தனர். 

இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் வேலை பார்த்த தனியார் நிறுவன நிர்வாகியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவினாசி வரவழைத்து ஊரடங்கு முடியும் வரை தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தி 6 பேரையும் திருப்பி அனுப்பினர்.

Next Story