திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் செயல்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் செயல்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 4:30 AM IST (Updated: 6 May 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் செயல்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அரசின் விதிமுறைகளின்படி இன்று(புதன்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தொழில்துறையினருடன் ஆலோசனைக்கூட்டம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு அதிகாரி ஞானசேகரன், திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மை சிறப்பு அதிகாரி நிர்மல்ராஜ், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தி தொழிலில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து தொழில்களும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் துறையினர், தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணித்து சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று உறுதி கூறியிருக்கிறார்கள். தொழில்துறை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.

அதிக வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பதால், அதிகமான தொழில் நிறுவனங்கள் தொடங்க முதல்-அமைச்சர் அனுமதித்துள்ளார். இதற்காக அனைவரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பூர் மீண்டும் நல்ல முறையில் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தொழில்துறையினர் தெரிவித்த சில கருத்துக்களையும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்து தேவைகளை பெற்றுக்கொடுக்கப்படும். பனியன் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் செயல்படும். திருப்பூர் மாநகரில் 231 பேருக்கு பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்றே வந்துள்ளது.

டாஸ்மாக் கடை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவியை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), தனியரசு(காங்கேயம்), மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி(சேலம் தேசிய நெடுஞ்சாலை) லதா, சென்னை பெருநகர இணைஇயக்குனர் தனலட்சுமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story