பொங்கலூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை - போலீஸ் விசாரணை


பொங்கலூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2020 11:15 PM GMT (Updated: 5 May 2020 7:58 PM GMT)

பொங்கலூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்(வயது 29). விவசாயி. இவருக்கு ரஞ்சனி(25) என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் விவசாயத்திற்காக பல இடங்களில் ஜெகதீஸ்வரன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாமல் போனதால் கடனை திரும்ப கட்ட முடியாமல் அவர் மனக்கஷ்டத்தில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை இனியும் கட்டமுடியாது என்ற முடிவுக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி நேற்று வீட்டு அருகே உள்ள தோட்ட பகுதியில் அவர் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து இறந்துபோன சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story