ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 49 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர்
ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 49 தமிழர்கள் 45 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர்.
ஓசூர்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பழைய குயிலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது சகோதரர் முருகேஷ் என்பவர், கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி இறந்து போனார். இதையடுத்து, சுப்பிரமணி குடும்பத்தினர் 49 பேர் துக்க நிகழ்ச்சிக்காக சிவமொக்காவுக்கு சென்றனர். இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், 4 சிறுவர், சிறுமிகள் உள்பட சுப்பிரமணி குடும்பத்தினர் 49 பேரும் சொந்த கிராமத்திற்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு கர்நாடக அரசு, உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தந்தது. தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கர்நாடக அரசின் உதவியுடன், 2 பஸ்களில் சுப்பிரமணி உள்பட அனைவரும் 45 நாட்களுக்கு பிறகு நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு வந்த அவர்களை, ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.
மேலும் அவர்களை, கர்நாடக மாநில அ.தி.மு.க. இணை செயலாளர் குமார் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் சத்யா, தளி பிரகாஷ் ஆகியோர் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினார்கள். ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி சுப்பிரமணி குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையின்படி சுப்பிரமணி குடும்பத்தினர் 2 பஸ்கள் மூலம் சொந்த ஊர் திரும்பினர். கர்நாடகாவில் 45 நாட்கள் சிக்கி தவித்த எங்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சுப்பிரமணி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story