கோயம்பேடு சென்று திரும்பிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி


கோயம்பேடு சென்று திரும்பிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 6 May 2020 4:17 AM IST (Updated: 6 May 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு சென்று திரும்பிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகள் லாரிகள் மூலம் சென்னை உள்பட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக் காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களாக லாரிகளில் சென்னை கோயம்பேடுக்கு காய்கறிகளை சிலர் ஏற்றிச்சென்றனர்.

இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் உள்பட 33 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்தன.

4 பேருக்கு தொற்று உறுதி

அதில் லாரி டிரைவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் 20 முதல் 42 வயது வரை இருக்கும். கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தவிர சளி மாதிரி எடுக்கப்பட்ட மற்றவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

வீடுகளை விட்டு வெளியே வர தடை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் பச்சை மண்டலத்தை நோக்கி சென்றது. தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த நஞ்சநாடு அருகே உள்ள கோழிக்கரை, கக்கன்ஜி காலனி, சேலாஸ் அருகே உள்ள நேரு நகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் அனைத்து துறை ஊழியர்களை கொண்டு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்துடன் 26 பேர் அனுமதி

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் வரை 146 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். மீதி 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் திருப்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். மேலும் கொரோனா தொற்று சந்தேகத்துடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 19 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 7 பேரும் ஆக மொத்தம் 26 பேர் ஆஸ்பத்திரிகளில் நேற்று சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆண்கள் 8 பேர், பெண்கள் 17 பேர். சிறுமி ஒருவர் ஆவார். 

Next Story