பச்சை மண்டலமாக மாறிய ஈரோடு: 21 நாட்களாக கொரோனா தொற்று இல்லை


பச்சை மண்டலமாக மாறிய ஈரோடு: 21 நாட்களாக கொரோனா தொற்று இல்லை
x
தினத்தந்தி 6 May 2020 5:36 AM IST (Updated: 6 May 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

21 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக ஈரோடு மாறியது. இருப்பினும் பொது ஊரடங்கு நடைமுறைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு, 

கொரோனா தொற்று காரணமாக ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்குள் இருந்தது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேர் மூலம் கொரோனா பரவல் ஈரோட்டில் தொடங்கியது. அது 70 பேர் வரை பாதிப்பு என்ற நிலையில் இருந்தது. இதற்கிடையே கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்தார். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு ஈரோட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக முதன் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டமும் ஈரோடாக இருந்தது.

ஆனால், ஈரோடு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியாலும், திட்டமிட்ட பணியாலும் கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிகிச்சையில் இருந்த 69 பேரும் முழுமையாக குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 69 பேரும் குணம் அடைந்த அன்றே சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற மண்டலத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து பச்சை மண்டலமாக ஈரோடு மாற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனால் கடந்த 21 நாட்களாக புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை ஈரோடு எட்டி உள்ளது. அதைத்தொடர்ந்து பச்சை மண்டலம் என்ற நிலைக்கு ஈரோடு வந்துள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டல நிலையில் செயல்படும்.

பச்சை மண்டலமாக மாறியதால் ஊரடங்கு தளர்வு செய்யப்படாது. ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும். 17-ந் தேதி வரை அரசு அறிவித்து உள்ள பொது ஊரடங்கு நடைமுறைகள் அப்படியே இருக்கும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து, கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஈரோடு மாவட்டத்துக்குள் வராமல் செய்ய வேண்டும். இதற்காக அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story