மக்கள் கூட்டம் கூடுவதால் கடைகளை சுழற்சி முறையில் திறக்க திட்டம் நாராயணசாமி தகவல்


மக்கள் கூட்டம் கூடுவதால் கடைகளை சுழற்சி முறையில் திறக்க திட்டம் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 2:57 AM GMT (Updated: 6 May 2020 2:57 AM GMT)

சாலைகளில் மக்கள் கூட்டம் கூடுவதால் கடைகளை சுழற்சி முறையில் திறக்க திட்டம் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருந்த திருக்கனூர், முத்தியால்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. புதுவை மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட சோதனை முடிந்து விட்டது.

தற்போது அனைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காததை அறிந்து, நானே நேரில் சென்று அறிவுரை கூறி உள்ளேன். இது தொடர்பாக வர்த்தக அமைப்புகளை சேர்ந்தவர்களை அழைத்துப் பேசி உள்ளேன்.

சுழற்சி முறை

கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால் கடைக்கு செல்வோர், வங்கி, அலுவலகம் செல்வோர் என பெரும் கூட்டம் நேற்று முன்தினம் கூடிவிட்டது. இது தொடர்பாக அப்போது அவர்களிடம் கலந்து ஆலோசித்தேன். அவர்களும் அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். மக்கள் கூட்டத்தை இன்னும் ஓரிரு நாள் கவனிப்போம். அதன் பின்பு எந்த கடைகளுக்கு எந்தெந்த நேரத்தை ஒதுக்குவது (சுழற்சி முறை) என்று முடிவு செய்வோம்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல கூடுதல் ரெயில்கள் இயக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கான கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கட்டணமின்றி அழைத்துவர வலியுறுத்தி இருந்தேன். தற்போது சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி நிதி உதவி செய்யும் என்று அறிவித்துள்ளார்.

வெளி மாநில தொழிலாளர்கள்

இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது. ரெயில் பயணிகளுக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசும் 15 சதவீதத்தை மாநில அரசும் தரவேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் வாகனங்களில் அழைத்து வருவது குறித்து எதுவும் கூறவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வர விரும்பும் தொழிலாளர்களை அழைத்து வர முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி கொடுக்க உள்ளேன். இங்குள்ளவர்கள் வெளிமாநிலம் செல்ல விரும்பினாலும் அதற்கான கட்டணத்தை கொடுக்க தயார்.

புதுவை எல்லைப்பகுதிகள் இப்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இருந்து பலர் மருத்துவம் பார்க்கவும், சிலர் வேலைக்கு வரவும் விரும்புகிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து யாரும் வரக்கூடாது என குறுக்கு சாலைகளையும் அடைத்து உள்ளோம்.

மறுபரிசீலனை செய்வோம்

புதுவை தொழிற்சாலைகளில் பணிபுரிய வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது அனுமதி இல்லை. சில தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தவர் பணிபுரிவதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்போது கடைகளில் கூட்டமாக கூடுபவர்களை தடுத்து நிறுத்துவது பெரிய சவாலாக உள்ளது. மக்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் கடைகள் திறந்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.

Next Story