மராட்டியத்தில் புதிதாக 1,200 பேருக்கு கொரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்குகிறது - 34 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் 34 பேர் பலியானதால், உயிரிழப்பு 651 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வந்தனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மட்டும் 1,008 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். அன்றைய தினம் தான் மராட்டியத்தில் அதிகப்பட்ச பாதிப்பாக இருந்தது.
இந்தநிலையில் அதை முறியடிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 758 ஆக உயர்ந்து உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கி இருப்பது மாநில மக்கள் மனதில் பதற்ற அலையை அடிக்க வைத்துள்ளது.
இதேபோல நேற்று மாநிலத்தில் மேலும் 34 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் மேலும் 769 பேர்
மாநில தலைநகரான மும்ைபயை பொறுத்தவரை புதிதாக 769 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 527 ஆகி உள்ளது. இதேபோல நகரில் மேலும் 25 பேர் நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை இங்கு 412 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மாநிலத்தின் இதர முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
தானே மாநகராட்சி- 543 (8 பேர் பலி), நவிமும்பை மாநகராட்சி- 519 (4 பேர் பலி), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி- 247 (3 பேர் பலி), மிரா பயந்தர் மாநகராட்சி- 187 (2 பேர் பலி), வசாய் விரார் மாநகராட்சி- 175 (4 பேர் பலி), பன்வெல் மாநகராட்சி- 115 (2 பேர் பலி).
மாலேகாவ் மாநகராட்சி- 391 (12 பேர் பலி), புனே மாநகராட்சி- 1,861 (115 பேர் பலி), பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி- 123 (3 பேர் பலி). நாக்பூர் மாநகராட்சி- 180 (2 பேர் பலி).
காரணம் என்ன?
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும்போதிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. மும்பையை பொறுத்தவரை மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதால், திறக்கப்பட்ட 2 நாட்களில் அவை மூடப்பட்டன.
மொத்தத்தில் கட்டுப்பாடுகள் தளர்வால் கொரோனா வேகமாக பரவுகிறதா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
குணமடைந்தவர்கள்
இதற்கிடையே சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 275 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாநிலத்தில் 3 ஆயிரத்து 94 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிகம் பேருக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 1 லட்சத்து 90 ஆயிரத்து 879 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 112 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 107 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,048 கன்டெய்ன்மென்ட் சோன் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story