டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டம்


டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 2:31 AM GMT (Updated: 7 May 2020 2:31 AM GMT)

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை நகர் உள்பட மாவட்டம் முழுவதும் 207 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மாதர் சங்கத்தினர் உள்பட பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கோவை உக்கடத்தில் உள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம் எழுப்பினர்

அப்போது அவர்கள், மதுவும், கொரோனாவும் உயிருக்கு ஆபத்தானது. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக் கூடாது. உணவு தானியக் கிடங்குகள் திறப்பதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமானது. இது தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை பாதிக்கச் செய்யும். எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று கோரிக்கை அட்டைகளை பிடித்தபடி சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து போராட்டம் நடத்திய பெண்கள் சிலர் கூறியதாவது:- டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 43 நாட்கள் மூடிக்கிடந்ததால் வீடுகளில் பெண்கள் நிம்மதியாக இருந்தோம். நாடு முழுவதும் குடும்ப வன்முறைகள் குறைந்தன. ஆனால் டாஸ்மாக் கடைகளை திறந்தால், வீடுகளில் நிம்மதி இருக்காது. தினமும் சண்டை சச்சரவுகள் தான் ஏற்படும். எனவே அரசு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும். அதற்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த போராட்டத்தை அவர்கள் சிறிது நேரம் நடத்தினார்கள்.

Next Story