“3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்” திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம்


“3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்” திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம்
x
தினத்தந்தி 7 May 2020 3:09 AM GMT (Updated: 7 May 2020 3:09 AM GMT)

“3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்” என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

தேனி,

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். கொரோனா பாதிப்பில் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளதால், அங்கிருந்து தேனிக்கு திரும்பி வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவருடைய வீட்டில் தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

சகோதரிக்கு உடல்நலம் பாதிப்பு

இதுகுறித்து பாரதிராஜா தனது கருத்தை ஒரு வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரி, தேனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக, முறையாக அனுமதிச்சீட்டு வாங்கி பல மாவட்டங்களை கடந்து தேனிக்கு வந்து இருக்கிறேன். என் சகோதரியை பார்த்தேன். அவர், அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

நான் பல மாவட்டங்களை கடந்து வந்ததால் நகராட்சி சுகாதார அலுவலரை தொடர்பு கொண்டு பேசி, தற்காப்புக்காக என்னை சோதித்து கொள்ளுங்கள் என்றேன். முறையான பரிசோதனை செய்தார்கள். நான் 3 முறை பரிசோதனை செய்துள்ளேன்.

கதைக்கான விவாதம்

சென்னையில் ஒரு முறை, ஆண்டிப்பட்டியில் ஒரு முறை, தேனியில் ஒரு முறை பரிசோதனை செய்துள்ளேன். 3 முறையும் பாதிப்பு எதுவும் இல்லை. முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் அவர்களிடம் இதை தெரிவித்தேன். என்னோடு உடன் அழைத்து வந்த உதவியாளர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் இருக்கிறோம்.

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்கள் மக்கள் நலன் கருதி எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நான் மகிழ்ச்சியாக அடுத்த கதைக்கான களத்தை தேர்வு செய்து விவாதித்துக் கொண்டு இருக்கிறேன். எங்களுக்கு எந்தவிதமான இடர்பாடும் கிடையாது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல உடன் நலத்துடனும் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story