தொழில்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க 4 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்


தொழில்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க 4 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 11:15 PM GMT (Updated: 7 May 2020 8:35 PM GMT)

திருப்பூரில் தொழில்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

அனுப்பர்பாளையம்,

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கூறியது போல திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளோம். கடந்த 2 நாட்களாக பெரும்பாலான தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் பணியை தொடங்கி உள்ளன. தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்து வருவது தொடர்பாக தொழில்துறையினரிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

திருப்பூரில் அதிக அளவு தொழிற்சாலைகள் இருப்பதால் தொழில்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையில் 1 தாசில்தார் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த குழுவை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுப்பார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்துதான் முடிவு எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அங்கு செல்லும்போது தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும். எதிர்க்கட்சிகள் எதை செய்தாலும் குறை சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.

சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பூரில் பணிகள் முழுமையாக தொடங்கி விட்டால் தொழிலாளர்கள் மனது மாறி பணியாற்ற தொடங்கி விடுவார்கள் என்று அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story