நெல்லை, தென்காசியில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிய மதுப்பிரியர்கள்


நெல்லை, தென்காசியில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிய மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 4:45 AM IST (Updated: 8 May 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.

நெல்லை, 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வந்தது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் 40 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 96 மதுக்கடைகள் உள்ளன. இதில் மேலப்பாளையம் உள்பட கொரோனா பாதிப்பு மற்றும் பிரச்சினைக்கு உரிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மதுக்கடை ஊழியர்கள் முன்னதாகவே வந்து விற்பனைக்கு தயார் ஆனார்கள். முக கவசம், கையுறை அணிந்தனர். கடைகளுக்கு வெளியே போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் தயார் நிலையில் இருந்தனர். காலை 10 மணிக்கு கடையை திறந்து விற்பனையை தொடங்கினர்.

அனைத்து வகை மதுபாட்டில்களும் 15 சதவீத கட்டண உயர்வுடன் விற்பனை செய்யப்பட்டது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கினார்கள். மதுக்கடைகளில் பார் வசதி இல்லாததால் பெரும்பாலானோர் அருகில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து மது குடித்து சென்றனர். ஒரு சிலர் தங்களது வீடுகளுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்று குடித்தனர். இதனால் மதுக்கடைகளில் விற்பனை களை கட்டியது. 40 நாட்களை கடந்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கடைகள் முன்பு மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாடுகளால் மதுப்பிரியர்களின் கூட்டம் சுமாராக இருந்தது. புதிய கட்டுப்பாடுகளின்படி ஒவ்வொரு மதுக்கடை முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோருக்கும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் மது வினியோகம் செய்யவும், ஆதார் அட்டை கொண்டு வருகிறவர்களுக்கு மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் கூடுதலாக மக்கள் எந்தெந்த நாட்களில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே மதுக்கடைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாநகரில் தெற்கு புறவழிச்சாலையில் 4 மதுக்கடைகளில் ஓரளவுக்கு மதுப்பிரியர்கள் காலை 10 மணிக்கு வரத்தொடங்கினர். அங்கு அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு கட்டைகள் வழியாக சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். தெற்கு புறவழிச்சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குள் நுழையும் பகுதி அருகில் தற்போது புதிதாக ஒரு மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. அந்த கடையை தெரிந்த சிலர் மட்டும் வந்து மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர். சில நேரங்களில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மாநகரில் உள்ள கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

‘எலைட்‘ எனப்படும் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் கடை பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை முதலே மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் பைகளை எடுத்து வந்து தங்களுக்கு பிரியமான விலை உயர்ந்த மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். கடை பகுதி தெருவை கடந்து வெளியே ரோடு வரை வரிசையில் நின்றவர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தி சமூக இடைவெளியை உருவாக்கினர். மொத்தத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று திருவிழா போல் காட்சி அளித்தது. இதேபோல், மானூர், முக்கூடல், விக்கிரமசிங்கபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளிலும் நேற்று மதுபிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுபானம் வாங்கி சென்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை மொத்தம் 69 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் புளியங்குடி, சிவகிரி ஆகிய பகுதிகளில் உள்ள 5 கடைகள் மற்றும் ஆலங்குளத்தில் உள்ள கடை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மேலும் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகள் பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை.

தென்காசி யானை பாலம், வாய்க்கால் பாலம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மதுப்பிரியர்கள் கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதேபோல் பாவூர்சத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.


Next Story