உணவு பொருட்கள் கிடைக்காததால் மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
உணவு பொருட்கள் கிடைக்காததால் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 1-வது வார்டுக்குட்பட்ட புதுக்காலனியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்றும், தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறி திலகர்நகரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள், வீட்டில் கவுன்சிலர் இல்லாததால் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்களை உள்ளே வரவிடாமல் 2 கேட்டையும் இழுத்து பூட்டினார்கள். இதனால் அவர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அரசின் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டால் நியாயம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. எனவே இங்கிருந்து உடடினயாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் புலம்பியபடி அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story