வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் போராட்டம்: 3,500 பேர் திரண்டதால் பரபரப்பு
ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் போராட்டம் நடத்தினார்கள். 3 ஆயிரத்து 500பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
பின்னலாடை நகரான திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்கால் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்து கையில் பணம் இல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
வெளிமாநில தொழிலாளர்கள் விரும்பினால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், அதற்கான இணையதள பதிவு முறையையும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல இணையதளம் மூலமாகவும் வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
திருப்பூர் மாநகர பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கடந்த சிலநாட்களாகவே மாநகரின் ஒவ்வொரு பகுதியிலும் திரண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் பெருமாநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயரை எரித்து வடமாநிலத்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன்பு 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திரண்டனர். இவர்கள் ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை ரெயில் நிலையத்துக்குள் அனுப்பாமல் வெளியே அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தங்களை சொந்த ஊருக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். நேரம் செல்ல செல்ல பல பகுதிகளில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் குமரன் சிலை முன்பு குவிய தொடங்கினார்கள்.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாநில அரசுகள் முடிவு செய்து ரெயில் விடும்போது தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் வடமாநிலத்தவர்களை அங்கிருந்து ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். இதற்காக வடமாநில தொழிலாளர்களிடம் சொந்த ஊர் செல்ல ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடந்தது. ஆனால் இதை அறிந்ததும் ரெயில் டிக்கெட் தான் கொடுக்கிறார்கள் என்ற தகவல் பரவியதால் மேலும் பல வடமாநில தொழிலாளர்கள் ஜெய்வாபாய் பள்ளி நோக்கி படையெடுத்தனர். 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் திரண்டதால் ஆன்லைனில் பதிவு செய்யும் பணியை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால் யாருக்கும் டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் அங்கு வந்து வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநில அரசுகள் முடிவு செய்து ரெயில் விடுவார்கள். அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் ரெயில் நிலையத்துக்கு வந்தால் போதும் என்று தெரிவித்தார். பின்னர் வடமாநில தொழிலாளர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணனிடம் கேட்டபோது, “தமிழக அரசு மற்றும் அந்தந்த வெளிமாநில அரசுகளுடன் பேசி முடிவு செய்யப்பட்டு அதன்பிறகே ரெயில் விடப்படும். ஒரு ரெயிலில் 1,100 பேர் பயணம் செய்ய முடியும். அவ்வாறு ரெயில் விடுவது குறித்த தகவல் குறுகிய காலத்தில் தான் அறிவிக்கப்படுகிறது. கோவையில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் புறப்படும் என்றார்கள். அந்த ரெயில் கூட இன்னும் புறப்படவில்லை. அதனால் ரெயில் விடுவது குறித்து அறிவிப்பு வந்த பிறகு வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். வடமாநில தொழிலாளர்களிடம் யாரோ ரெயில் விடுகிறார்கள், முன்பதிவு நடக்கிறது என்று வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். அதை நம்பி வீதிக்கு வருகிறார்கள்” என்றார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடந்த 3 நாட்களாக செயல்பட தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட துடிப்பது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று தொழில் துறையினர் புலம்பி வருகிறார்கள். ஆனால் வடமாநில தொழிலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவத்துக்கு செல்வது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story