செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்


செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 4:00 AM IST (Updated: 9 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செங்கல்பட்டு நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று செங்கல்பட்டு நகரம் ரேடியோ மலை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 3 பேர் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து நகராட்சி சார்பில் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 2 பேரை கைது செய்ய வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் கூறி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story