விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்தது


விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 8 May 2020 10:35 PM GMT (Updated: 8 May 2020 10:35 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 50 பேர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 26 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மற்ற 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து அந்த சந்தையில் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

இவர்களை போலீசாரின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் கண்டறிந்து செஞ்சி, திண்டிவனம், கப்பியாம்புலியூர், அரசூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி அவர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் 21 பேருக்கு கொரோனா

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 205 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக் கப்பெற்றது. இவர்களில் ஒரு கர்ப்பிணி உள்பட 21 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம் பெருமாள் கோவில் தெரு, விழுப்புரம் பள்ளிக்கூட வீதி மற்றும் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு, வானூர், புளிச்சப்பள்ளம், பாதிராப்புலியூர், விழுப்புரம் அருகே உள்ள பஞ்சமாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த 2 பேரை தவிர மற்ற 19 பேரும் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

226 ஆக உயர்ந்தது

இதை தொடர்ந்து, அவர்கள் 21 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 169 பேர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் வசிக்கும் கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கும் வகையில் அங்குள்ள பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Next Story