சாத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் பெண்கள் முற்றுகை


சாத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 May 2020 5:22 AM IST (Updated: 9 May 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நாரணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 30-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர், 

ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக குடிமகன்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் சமூக இடைவெளியில் நின்று மதுபாட்டில்கள் வாங்கும் வகையில் கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு கூட்டம் அலை மோதியது. இதேபோல் நேற்றும் விற்பனை நடைபெற்றது.

இந்த நிலையில் சாத்தூர் அருகே நாரணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மேலப்புதூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கடையில் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து போராட்டம் நடத்திய பெண்கள் கூறும்போது, மதுவால் எங்கள் கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக எங்கள் குடும்பம் நிம்மதியாக இருந்து வந்தது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு நிம்மதி இழந்துள்ளோம். எனவே குடும்ப பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்க அரசு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என்றனர்.

Next Story