2 டாக்டர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி: சிதம்பரம் நகரில் 4 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு


2 டாக்டர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி: சிதம்பரம் நகரில் 4 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2020 3:35 AM IST (Updated: 10 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

2 டாக்டர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் நகரில் 4 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல இடங்களில் போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை சிவப்பு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளன. இந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், சிதம்பரத்தில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகளையும் போலீசார் அகற்றினர்.

2 டாக்டர்கள் உள்பட 7 பேர்

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 34 பேர்களில் 7 பேர் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில் 4 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளனர். மேலும் ஒருவர் பெண் டாக்டர் என்பதுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவியும் ஆவார். மற்ற 2 பேரில் ஒருவர் தெற்குவீதியை சேர்ந்த ஒரு டாக்டர், மற்றொருவர் புதுத்தெருவை சேர்ந்த வங்கி ஊழியர் ஆவார்.

இதில் வங்கி ஊழியர் சென்னையில் இருந்து உரிய அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

சிதம்பரம் நகரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வசித்து வந்த 4 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், சமூக நலத்துறை தாசில்தார் பலராமன், நகராட்சி பொறியாளர் மகாதேவன் மற்றும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் நகரில் தடுப்புகளை அமைத்தனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதியிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. சிதம்பரத்தில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டு ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தடுப்பு கட்டைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்களை அச்சமடைய செய்துள்ளது. 

Next Story