ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: வேலூர் மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: வேலூர் மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 11 May 2020 11:15 PM GMT (Updated: 11 May 2020 8:11 PM GMT)

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

வேலூர், 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், சிமெண்டு கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்த உத்தரவு வேலூர் மாவட்டத்துக்கு பொருந்தும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 47 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் டீக்கடை, சாலையோர தள்ளுவண்டி ஒட்டல்கள், பேக்கரி கடை, பழக்கடை காலையிலேயே திறக்கப்பட்டன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டன. பல நாட்களாக வீடுகளில் பயன்பாடு இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் பல வாகனங்கள் இயங்காமல் பழுது ஏற்பட்டிருந்தது. நேற்று காலையிலேயே பலர் பழுது ஏற்பட்ட இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் கடைகளுக்கு உருட்டிச் சென்றனர்.

முடிதிருத்தும் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் கடைகள் மூடப்பட்டிருந்தன. செல்போன் கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் அங்கும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கினர். வேலூர் மாநகரில் நேற்று அதிகஅளவிலான பொதுமக்களின் நடமாட்டத்தை காணமுடிந்தது. பொதுமக்கள் வரத்து குறைவாக காணப்பட்டதாலும் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியது போல் வேலூர் மாநகர் காணப்பட்டது.

பொதுமக்களுக்கு பணத்தேவை அதிகம் தேவைப்பட்டதால் பணம் எடுக்க அவர்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் குவிந்தனர். அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிந்தது. சில வங்கிகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாகவும் நின்றிருந்தனர்.

மாவட்டத்தில் சிறிய நகைக்கடைகள், பர்னீச்சர் கடைகள், சிறிய அளவிலான துணிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. குளிர்சாதன வசதி கொண்ட பெரிய நகைக்கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்படவில்லை.

நேதாஜி மார்க்கெட் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் அங்கு தொடர்ந்தன. சாரதி மாளிகையில் கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் டீ குடிக்க அனுமதித்ததை காணமுடிந்தது. பிளாஸ்டிக் கப்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் பல கடைகளில் பொதுமக்களிடம் பாத்திரம் எடுத்து வருமாறு டீக்கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த கட்டுப்பாடுகள் தளர்வால் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்தனர்.

Next Story