ஜோலார்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டீகடை எரிந்து நாசம்; கணவன்-மனைவி உயிர் தப்பினர்
ஜோலார்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டீகடை எரிந்து நாசமானது. இதில் கணவன்-மனைவி உயிர்த்தப்பினர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரை சேர்ந்தவர் ஞானஒளி (வயது45). அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே டீ கடை மற்றும் பெட்டி கடை வைத்துள்ளார். நேற்று காலை ஞானஒளி டீ கடையை திறந்து வியாபாரம் செய்தார். மதியம் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இன்று அதிகாலை டீ கடை திறக்கவேண்டும் என்பதால் டீ கடைக்கு தேவையான பாலை வாங்கிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் டீ கடையில் பாலை காய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது டீ கடையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்- மனைவி இருவரும் கடையிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். அதற்குள் டீ கடை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது.
சிலிண்டர் வெடித்து பறந்ததில் அருகே உள்ள புளிய மரமும் தீ பிடித்து எரிந்தது. மேலும் அருகில் உள்ள துணி கடையின் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டை போலீசார் அக்கம் பக்கத்திலிருந்த தீயணைப்பான் மூலமும், தண்ணீர் மூலமும் தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்களும் விரைந்துவந்து டீ கடை மற்றும் புளிய மரத்தின் மீது தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலிறிந்ததும் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞானஒளியிடம் விசாரணை நடத்தினர்.
இரவு நேரத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து டீ கடை முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story