குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்


குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்
x
தினத்தந்தி 12 May 2020 8:05 AM IST (Updated: 12 May 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், குடும்பத்தை மறந்து நோயாளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதி செவிலியர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

கடலூர்,


கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி:

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல. ஒருவகை தொண்டு. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையோடு ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. இன்று உலகத்தையே புரட்டி போட்டு கொண்டிருக்கும் கொரோனா சேவையில் செவிலியர்கள் தங்களை எந்த அளவுக்கு அர்ப்பணித்து கொண்டு பணிபுரிந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒரு காலத்தில் சமுதாயத்தில் செவிலியர்களுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான இன்று(செவ்வாய்க் கிழமை) அனைத்து மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி சொந்த விருப்பு வெறுப்புமின்றி நோயாளிகளிடம் நடந்து கொள்வோம். நோயாளிகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தி செயல்படுவது என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

அர்ப்பணிப்பு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் ஸ்டெல்லா மேரி:

செவிலியர் பணியில் சேர்ந்த நாளில் இருந்தே நாங்கள் மருத்துவமனைக்கு வருகின்ற போது எங்களுடைய குடும்பம், குழந்தைகள் அனைவரையும் மறந்து மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறோம். கொரோனா மட்டுமல்ல எந்த பேரிடர் வந்தாலும் செவிலியர் தினத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு பெருமையோடு கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று பகல் 12 மணி அளவில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் செவிலியர்கள் அனைவரும் அவரவர் பணி செய்யும் இடத்தில் இருந்தே மெழுகுவர்த்தி ஏந்தி உலக செவிலியர் தினத்தை கொண்டாடுகிறோம். அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

செவிலியர் ராதா:

இத்தாலி நாட்டை சேர்ந்த மறைந்த செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-வது பிறந்தநாள் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் செவிலியர் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்திலும் நாங்கள் எவ்வித அச்சமுமின்றி நோயாளிகளுக்கு சேவை செய்து உலக செவிலியர் தினத்தை கொண்டாடுவதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.

Next Story