தர்மபுரி மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு


தர்மபுரி மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 May 2020 8:58 AM IST (Updated: 12 May 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பணிபுரியும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீஸ் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

6 ஆக உயர்வு

இதேபோல் தர்மபுரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயது நபர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சென்னையிலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் சென்னையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் கோயம்பேடு சென்று திரும்பிய 3 காய்கறி வியாபாரிகள் என 4 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. 

Next Story