நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை


நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2020 4:40 AM GMT (Updated: 12 May 2020 4:40 AM GMT)

நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை சேலத்தில் பரபரப்பு.

சேலம்,

சேலம் கோரிமேடு பகுதியிலுள்ள மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்த நிவாரணத்தொகை மற்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது ஊரடங்கு 45 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை நிவாரணத்தொகை வழங்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு படிப்படியாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் என்பவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். நல வாரியத்தில் பதிவு செய்யாமல் சுமார் 5,000 ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் ரேஷனில் 10 கிலோ அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் சுமார் 10 சதவீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். என்றார்.

கொரோனா நிவாரண தொகை வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story