சிதம்பரத்தில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது


சிதம்பரத்தில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 12 May 2020 9:53 PM GMT (Updated: 12 May 2020 9:53 PM GMT)

சிதம்பரத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிதம்பரம்,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று காலை 9 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திடீரென மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் பலர் குடைபிடித்தடி சென்றனர். இந்த மழை மதியம் 12 மணி வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

அதன்பின்னர் மதியம் 3 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால், பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story