மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்


மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2020 3:29 AM IST (Updated: 13 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி கடலூர் துறைமுகத்தில் படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு செல்லவில்லை. இதனிடையே மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கடை பிடிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம் இந்தாண்டு, கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இதன் காரணமாக ஆழ்கடலுக்கு விசைப்படகு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

படகுகள் சீரமைப்பு

ஆனால் மீன்வளத்துறை அறிவித்துள்ள அறிவுரைப்படி நாட்டுப்படகுகள் மற்றும் சிறிய என்ஜின்கள் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மூலம் கடலோரப் பகுதிகளான 12 நாட்டிக்கல் மைல் அளவு வரை சென்று மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கடலூர் முதுநகர் மீன் அங்காடி மூடப்பட்டுள்ளது.

இதனால் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, ராசாபேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வந்து மீன்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனிடையே மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளில் உள்ள பழுதுகளை நீக்குவது, பலகைகளை சரிசெய்வது, என்ஜின்களை சீரமைப்பது மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story