காட்பாடியில் இருந்து கோரக்பூருக்கு 1,464 பேர் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைப்பு
காட்பாடியில் இருந்து, மேற்கு வங்காள மாநிலம் கோரக்பூருக்கு 1,464 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
காட்பாடி,
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வேலூரில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்கி இருந்தனர்.
அவர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்தனர். அதன்படி வேலூரில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் குறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு 2 கட்டமாகவும், 3-வது, 4-வது கட்டமாக பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு நோயாளிகளும், அவருடைய உறவினர்களும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் 5-வது கட்டமாக கோரக்பூருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வரிசையாக காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் சென்று அங்கு 24 பெட்டிகளுடன் தயாராக இருந்த சிறப்பு ரெயிலில் ஏறி அமர்ந்தனர்.
பகல் 12 மணிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அப்போது வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சிறப்பு ரெயில் காட்பாடியிலிருந்து கோரக்பூருக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story