முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது வணிகர்களுக்கு கலெக்டர் உத்தரவு


முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது வணிகர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2020 9:39 AM IST (Updated: 13 May 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது என கலெக்டர் மெகராஜ் வணிகர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்த வேண்டும். முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கை கழுவ ஏதுவாக கடைகளின் முன்பு சோப்பு மற்றும் கிருமி நாசினி திரவம் வைக்க வேண்டும். பொருட்கள் வாங்க வருபவர்கள் கைகழுவிய பின்னரே பொருட்கள் வாங்க அனுமதிக்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்க அறிவுறுத்த வேண்டும்.

பொருட்கள் வழங்க கூடாது

இந்த 3 விதிமுறைகளையும் கடை உரிமையாளர்கள் முழுமையாக கடைபிடித்து பொருட்கள் வழங்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது. இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு, கடைபிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிகர் சங்க நிர்வாகிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கட்டுப்பாட்டு மண்டலம்

பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இதுவரை 600 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள். இதேபோல் வட மாநிலங்களில் இருந்து 860 பேர் நாமக்கல் மாவட்டத்திற்கு வர பதிவு செய்து உள்ளனர். இவர்களில் இதுவரை 400 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி வைத்து உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் 21 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. தற்போது அது 17 கட்டுப்பாட்டு மண்டலமாக குறைந்து உள்ளது. இருப்பினும் நமது மாவட்டம் இன்னும் சிவப்பு மண்டலத்தில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story