சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட உத்தரபிரதேச தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு


சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட உத்தரபிரதேச தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2020 5:00 AM IST (Updated: 14 May 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர். இதனால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

வடமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் ரெயில் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் இதுவரை சொந்த ஊர் செல்ல வடமாநில தொழிலாளர்கள் 10 ஆயிரத்து 400 பேர் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து 2 சிறப்பு ரெயில்கள் பீகார் மாநிலத்துக்கு இயக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை ஒடிசா மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. 1,464 பேர் இந்த ரெயில் மூலமாக ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தும், இதுவரை தங்களுக்கு ரெயில் விடும் தகவல் வரவில்லை என்றும், அதனால் தங்களை சொந்த ஊருக்கு விரைவில் ரெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பியபடி நடுரோட்டில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இளைஞர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மறியல் செய்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து கலைத்தனர்.

அப்போது அங்கு வந்த வடக்கு போலீசார், இணையதளம் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு ரெயில் விடுவது குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே ரெயில் நிலையத்துக்கு வர வேண்டும். அதுவரை அவரவர் அறைகளிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினர். அந்த பகுதியில் திரண்டு நின்ற தொழிலாளர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களில் 13 பேரை பிடித்து போலீசார் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் நேற்று அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story