விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2020 4:04 AM IST (Updated: 14 May 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 7 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 298 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 55 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற 241 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ்காரர் பாதிப்பு

இவர்களில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த விழுப்புரம் அருகே வ.பாளையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் கோயம்பேடு தொழிலாளர்கள் வந்த வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வுக்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும், விழுப்புரம் அருகே காங்கேயனூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆசாரங்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

305 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் 7 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள், 24 மணி நேரமும் கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 248 பேர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 7 பேரும் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர கொரோனா அறிகுறியுடன், விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 54 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 29 பேரும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் 58 பேரும், விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் 60 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 470 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்எச்சரிக்கை தொடர்பாக 755 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 28 கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை கூடத்தில் குளறுபடி நடந்திருக்கலாம் என்று கருதிய அதிகாரிகள், மறுபரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 28 கர்ப்பிணிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, மறுபரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கர்ப்பிணிகள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் தங்களுக்கும் கொரோனா பரவி விடுமோ என அச்சமடைந்துள்ளனர். எனவே மறுபரிசோதனை அறிக்கை முடிவை மாவட்ட நிர்வாகம் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story