ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிக்கை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிக்கை
x
தினத்தந்தி 15 May 2020 5:50 AM IST (Updated: 15 May 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் அமைந்துள்ள துணிக்கடைகள் நிபந்தனைகளை கடைபிடித்து விற்பனையை தொடங்கி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. துணிக்கடைகளில் பணியாளர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும், முக கவசம், கையுறையுடன் வருவோரை மட்டுமே கடை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்க வேண்டும், கடை நிர்வாகத்தினர் 33 சதவீத ஊழியர்களை கொண்டு மட்டுமே கடையை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைக்குள் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கடைக்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் அனுமதிக்க வேண்டும்.

குளிர்சாதன வசதி இருந்தால், அதனை நிறுத்திவிட்டு மின்விசிறியுடன் மட்டுமே செயல்பட வேண்டும். கடைக்கு வரும் நுகர்வோர்கள் விவரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை கடை உரிமையாளர்கள் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story