காரிமங்கலம், அரூர் பகுதியில் சாராய வழக்கில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் கைது


காரிமங்கலம், அரூர் பகுதியில் சாராய வழக்கில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2020 8:54 AM IST (Updated: 16 May 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம், அரூர் பகுதியில் சாராய வழக்கில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பேகாரஅள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், முருகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கொய்யாமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது45), கூத்தப்பன் (57), நாகன் (27), முனியப்பன் (47), சிவாஜி (41) ஆகிய 5 பேரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராய ஊறல்களையும் அழித்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் கைது

அரூர் அடுத்த நரிப்பள்ளி சோதனைச்சாவடியில் கோட்டப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போதையில் இருப்பதும், கேனில் 2 லிட்டர் சாராயம் வைத்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அரூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன்(38), கந்தசாமி (44) என்பதும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story