சேலத்தில் செல்போன் உதிரிபாகங்கள் விலை 3 மடங்கு உயர்வு கொரோனா ஊரடங்கால் வரத்து குறைந்ததால்


சேலத்தில் செல்போன் உதிரிபாகங்கள் விலை 3 மடங்கு உயர்வு கொரோனா ஊரடங்கால் வரத்து குறைந்ததால்
x
தினத்தந்தி 16 May 2020 9:33 AM IST (Updated: 16 May 2020 9:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக வரத்து குறைந்ததால் செல்போன் உதிரிபாகங்கள் வரத்து குறைந்துள்ளதால், சேலத்தில் அவற்றின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் உள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வையொட்டி செல்போன் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் செல்போன் உதிரிபாகங்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

செல்போனின் முக்கிய உதிரிபாகமான டிஸ்பிளே முன்பு ரூ.1,200-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. செல்போன் பேட்டரிகள், ‘ஸ்பிரிப்‘ என்ற செல்போன் உள்பகுதியில் பொருத்தக்கூடிய உதிரிபாகத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இதே போன்று அனைத்து உதிரிபாகங்களின் விலையும் 3 மடங்கு அதிகரித்து இருக்கிறது. சீனாவில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் உதிரிபாகங்களின் வரத்து குறைந்து உள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

பதுக்கி வைத்து விற்பனை

மேலும் செல்போனுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளதாலும், புதிய செல்போனின் விலை 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனிடையே மொத்தமாக உதிரிபாகங்களை வாங்கி விற்பவர்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாலும் விலை அதிகரித்து இருப்பதாகவும் செல்போன் கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகம் செல்போன் விற்பனையாளர்கள் சங்க தலைவர் தமிழன் பார்த்திபன் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக செல்போன் விற்பனை குறைந்துள்ளது. பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்து இருப்பதும் ஒரு காரணமாகும். செல்போன் பழுதானால் உதிரிபாகங்களை மாற்றி சமாளிப்பவர்களுக்கும் அதன்விலை உயர்வு 3 மடங்கு உயர்ந்து இருப்பது மேலும் சிரமத்தை அளிக்கும். டிஸ்பிளே, பேட்டரி உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. செல்போனின் ஒட்டு மொத்த உலக சந்தையாக சீனா திகழ்ந்து வருகிறது. சீனாவில் தற்போது நிலைமை சரியாகி இருந்தாலும் அங்கிருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் நமது நாட்டுக்கு வரத்து குறைந்து இருக்கிறது.

உற்பத்தி செய்ய வேண்டும்

மேலும் செல்போன் உதிரி பாகங்கள் அன்னிய நாடுகளில் இருந்து வாங்குவதை தவிர்த்து நமது நாட்டிலேயே உதிரிபாகங்களை செல்போன் நிறுவனங்கள் அதிகமாக உற்பத்தி செய்யவேண்டும். தற்போது டெல்லி, மும்பை மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு உதிரிபாகங்கள் வரவில்லை. இதுவும் விலையேற்றத்துக்கு ஒரு காரணம்.

உதிரிபாக விலை அதிகரிப்பால் அன்றாட பிழைப்பை நடத்தும் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விலை உயர்வை சரி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story