மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா


மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா
x
தினத்தந்தி 16 May 2020 10:45 AM IST (Updated: 16 May 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா மீண்டும் ஆட்டத்தை தொடங்கி உள்ளது. எனவே மாவட்ட எல்லைகளில் கூடுதல் முகாம்கள் அமைத்து தனிமைப்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிலும் மதுரை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர், சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர இவர்கள் மூலமாக பலருக்கு கொரோனா பரவி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

மதுரையில் நேற்று முன்தினம் கூட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் மும்பையில் இருந்து மதுரை வந்தவர்கள். மற்ற 2 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். இது போல் நேற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்ணிக்கை கூட வாய்ப்பு

இதுவரை கட்டுக்குள் இருந்த கொரோனாவின் எண்ணிக்கை, இந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபர்கள் மூலம் அதிகரித்துவிட்டது. கொரோனா மீண்டும் ஆட்டத்தை தொடங்கி இருப்பதால் வரும் நாட்களிலும் இதுபோல் எண்ணிக்கை கூடலாம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

22 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த பெண் மூலம் அங்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வட மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி கொரோனா பரிசோதனையை அனைவருக்கும் செய்ய வேண்டும்.

அதிகரிக்க வேண்டும்

இந்த சோதனையை ஒரே கட்டமாக செய்யாமல் மூன்று கட்டமாக செய்ய வேண்டும். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை போன்ற இடங்களில் இருந்து வருபவர்களை மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்குள் அவர்களை அனுமதிக்க விடாமல் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்க வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைத்து நபர்களையும் கண்டிப்பாக 15 நாட்களுக்கு கண்காணிப்பு முகாம்களில் தங்க வைப்பதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். 15 நாட்கள் தங்க வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தாலும், அதன் அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் தங்கியிருக்கும் நாட்களிலேயே தெரிந்துவிடும். ஒரு வேளை பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களை அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விடலாம்.

ஆனால் தற்போது ஒரு சில நாட்கள் மட்டுமே முகாம்களில் தங்க வைப்பதாகவும், பெயரளவில் மட்டுமே பரிசோதனை செய்து விட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபர்களால் பாதிப்பு கூடுகிறது.

மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு சில தினங்களில் வீட்டிற்கு அனுப்பப்படுவதால் அவர்கள் மக்களுடன் மக்களாக பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் அந்த நபர்களிடமிருந்து மேலும் பலருக்கு சங்கிலித் தொடர்போல் கொரோனா பரவி விடக்கூடும். இதுபோல் வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற நபர்கள் பிரதான சாலைகள் மட்டுமின்றி பல்வேறு இணைப்பு சாலைகளையும் பயன்படுத்தி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது. எனவே வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களை கண்டுபிடித்து பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

சுகாதார துணை இயக்குனர்

இதுபற்றி மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து, மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 339 பேர் மதுரை மாவட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உசிலம்பட்டி, மேலூர், கொட்டக் குடி, அரிட்டாபட்டி, பேரையூர், திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பாலை, ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக கண்காணிப்பு முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு முதல்கட்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒருவேளை பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு அங்கு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுபோல் வீட்டு கண்காணிப்பில் இருக்க வசதி இல்லாதவர்கள் மேலும் 7 நாட்களுக்கு அந்த முகாமிலேயே தங்க வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கொரோனா பரவுதல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் நலன் கருதி இந்த முகாம்களில் தங்க வேண்டும். அவ்வாறு தங்க மறுக்கும் நபர்கள் வீடுகளில் தங்களை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு இது போன்ற தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டிற்கு அனுப்பிய பின்னர் உடனடியாக அவர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. தங்களால் எத்தனை நாள் முடியுமோ அத்தனை நாள், அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோல் அக்கம்பக்கத்தில் யாரேனும் வெளிமாநிலத்தில் இருந்து அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தால் அவர்கள் குறித்த தகவலை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகள் என 3 வகையாக கண்காணிப்பு நிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை 2 கட்டங்களாக செய்யப்படுகிறது.

ஒத்துழைப்பு

மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் தங்களால் முடிந்த ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மூலமே தற்போது அதிக அளவில் கொரோனா பரவுவதாக தெரியவருகிறது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் சென்னை போன்ற ஹாட்ஸ்பாட் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தாங்களாக முன்வந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு நோய் பரவுதலை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story