மராட்டியத்தில் ஒரே நாளில் 67 பேர் பலி: மும்பையில் மேலும் 884 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது


மராட்டியத்தில் ஒரே நாளில் 67 பேர் பலி: மும்பையில் மேலும் 884 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 17 May 2020 4:30 AM IST (Updated: 17 May 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரேநாளில் 67 பேர் பலியானார்கள். மும்பையில் மேலும் 884 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஆட்கொல்லி கொரோனா வைரசின் கூடாரமாகி உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக இங்கு தினமும் ஆயிரம், ஆயிரமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்றும் மாநிலத்தில் புதிதாக 1,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை மாநிலத்தில் 30 ஆயிரத்து 706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 67 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் ஒரேநாளில் 67 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதுநாள் வரையில் இதுவே அதிகபட்ச பலி எண்ணிக்கை ஆகும். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்து உள்ளது.

இதுதவிர மராட்டியத்தில் மேலும் 524 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை இங்கு 7 ஆயிரத்து 88 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்து 479 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை

மும்பை நகரில் மட்டும் நேற்று புதிதாக 884 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மும்பையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 396 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நகரில் மேலும் 41 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 26 பேர் ஆண்கள். 15 பேர் பெண்கள். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் இதுவரை 4 ஆயிரத்து 806 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

இந்தநிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் (கன்டென்மென்ட் சோன்) வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Next Story