ஊரடங்கால், வேலை கிடைக்காததால் விரக்தி: போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி எலக்ட்ரீசியன் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில், ஊரடங்கால் வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த எலக்ட்ரீசியன், போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35). எலக்ட்ரீசியனான இவர், ஒப்பந்த அடிப்படையில் சில மாதங்கள் பட்டுக்கோட்டை நகராட்சியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வேலை இல்லாமல் மணிகண்டன் இருந்து வந்துள்ளார்.
வேலை எதுவும் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர், நேற்று பிற்பகல் 1.45 மணி அளவில் பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர், அங்குள்ள 250 அடி உயரமுள்ள வயர்லெஸ் கோபுரத்தில் விறு, விறுவென ஏறி உச்சிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த போலீசார் வயர்லெஸ் கோபுரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர், எனக்கு வேலை தந்தால்தான் நான் கீழே இறங்கி வருவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்து விட்டார்.
சம்பவ இடத்துக்கு பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி, தாசில்தார் அருள்பிரகாசம், நகராட்சி ஆணையர் சுப்பையா, தீயணைப்பு அதிகாரி செல்வராஜ் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், வேலை வாங்கி தருகிறோம் கீழே இறங்கி வா என்று ஒலி பெருக்கி மூலம் அவரிடம் கூறினர்.
இதை தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3.45 மணிக்கு வயர்லெஸ் கோபுரத்தில் இருந்து மணிகண்டன் கீழே இறங்கி வந்தார். பின்னர் மணிகண்டனை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். ஊரடங்கால், வேலையில்லாத விரக்தியில் போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி எலக்ட்ரீசியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story