தஞ்சை மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிய குடிமகன்கள் - டோக்கன் மூலம் மட்டுமே வினியோகம்


தஞ்சை மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிய குடிமகன்கள் - டோக்கன் மூலம் மட்டுமே வினியோகம்
x
தினத்தந்தி 18 May 2020 5:45 AM IST (Updated: 17 May 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். டோக்கன் மூலம் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் டாஸ்மாக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டாஸ்மாக்கடைகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7, 8 ஆகிய தேதிகளில் திறக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் 100 கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக்கடைகளை திறக்க கோர்ட்டு தடை விதித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்ககூடாது என்று ஐகோர்ட்டு விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 8 மணி முதலே குடிமகன்கள் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர். காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டதும் நீல நிற டோக்கன் வழங்கப்பட்டது. 50 பேர் என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் வாங்கிச்சென்ற பின்னர் மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.

ஒரு சில கடைகளில் ஒருவருக்கு 4 குவார்ட்டர் மது வழங்கப்பட்டன. சில கடைகளில் 6 குவார்ட்டர் பாட்டில்கள் வரை வழங்கப்பட்டன. சிலர் மதுபானங்களை வயிற்றுப்பகுதியில் மறைத்து எடுத்துச்சென்றனர். சிலர் துணி பைகளை எடுத்த வந்து அதில் வாங்கிக்கொண்டு சென்றனர்.

டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. போலீசார் சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு குடிமகன்களுக்கு மைக் மூலம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். தஞ்சை ரெயிலடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே டோக்கன் சீக்கிரமே தீர்ந்து விட்டதால், மதுபானம் வாங்க வந்தவர்கள் தங்களுக்கு டோக்கன் கிடைக்குமா, என காத்துக்கிடந்தனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று 100 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது வினியோகம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பட்டுக்கோட்டையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டன. அப்போது நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். பட்டுக்கோட்டையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னே மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்றனர். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதுக்கூரில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக போலீசார் வழங்கும் டோக்கனை பெற மதுப்பிரியர்கள் விவசாய நிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.

Next Story