உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது


உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2020 3:23 AM GMT (Updated: 18 May 2020 3:23 AM GMT)

உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் மதனகிரியப்பா, இவரது மகன் முனிராஜ் (வயது 33). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டுக்கு அருகில் நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கெலமங்கலத்தை அடுத்த போடிச்சிப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு பாறையில், கல் உடைப்பது தொடர்பாக, முனிராஜிக்கும், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பன் (27) என்பவருடைய தரப்பினருக்கும் இடையே 3 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்ததும், அதனால் கொலை சம்பவம் அரங்கேறியதும் தெரிந்தது. இதையடுத்து போடியப்பன் (27), ஹரிஸ் (20), முனிராஜ் (26), சீனிவாசன் (26), மாதேஷ் (22) ஆகிய 5 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர்.

திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் அருகே உள்ள சிகரலப்பள்ளியை சேர்ந்த திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் குமார் (30), அனுமந்தபுரத்தை சேர்ந்த ரமேஷ்(21) ஆகிய 2 பேருக்கும் விவசாயி கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story