மகன்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்ட பெண் அடித்து கொலை அவினாசி அருகே பயங்கரம்


மகன்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்ட பெண் அடித்து கொலை அவினாசி அருகே பயங்கரம்
x
தினத்தந்தி 18 May 2020 10:01 AM IST (Updated: 18 May 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே கிரிக்கெட் விளையாட்டின்போது மகன்களை தாக்கியவர்களை தட்டி கேட்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள மடத்துப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 44). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கொண்டாள் (வயது 35). இவர்களுடைய மகன்கள் சிவா (19) மற்றும் ஜீவா (17).

இவர்கள் 2 பேரும் கடந்த வாரம் அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றனர். அங்கு கிரிக்கெட் விளையாடிய இவர்களுக்கும், மற்ற அணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவாவும், ஜீவாவும் ஏற்கனவே கிரிக்கெட் விளையாடிய பகுதிக்கு நேற்று சென்றனர். அப்போது அங்கு இருந்தவர்கள், சிவாவையும், ஜீவாவையும் தாக்கி உள்ளனர். இதனால் இவர்கள் 2 பேரும் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகன்களை தாக்கியவர்களை தட்டிக்கேட்பதற்காக பழனியும், அவருடைய மனைவி கொண்டாளும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர்.

அடித்து கொலை

அப்போது அங்கு இருந்தவர்களிடம் “எனது மகன்களை எதற்காக தாக்கினீர்கள்“ என்று கொண்டாள் கேட்டுள்ளார். இதனால் கொண்டாள் தரப்புக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் அருகில் கிடந்த வீட்டின் மேற்கூரையாக பயன்படுத்தப்படும் ஓடை எடுத்து கொண்டாளை தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கொண்டாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கொண்டாளை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று கொண்டாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள் அவினாசி அருகே பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலை மறியல்

இதற்கிடையில் கொண்டாளை தாக்கி கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவினாசி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story