மதியத்திற்கு மேல் மதுபிரியர்கள் வராததால் ஊட்டியில் வெறிச்சோடிய மதுக்கடைகள்
மதியத்திற்கு மேல் மதுபிரியர்கள் வராத தால் ஊட்டியில் உள்ள மதுக்கடைகள் வெறிச்சோடின.
ஊட்டி,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, கடந்த 7,8-ந் தேதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மூடப்பட்டது. பின்னர் இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. நீலகிரியில் 62 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்புகளை கொண்டு தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 அடி இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது. கடந்த 16-ந் தேதி மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் மிகவும் குறைந்து பல மதுக்கடைகள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.
விற்பனை மந்தம்
காலையில் 1 மணி நேரம் சூடுபிடிக்கும் மதுபான விற்பனை பின்னர் மந்தமாகிறது. நேற்று மதியத்திற்கு மேல் மதுபிரியர்கள் வராததால் ஊட்டியில் உள்ள மதுக்கடைகள் வெறிச்சோடி இருந்ததால், டாஸ்மாக் பணியாளர்கள் யாராவது வாங்க வருவார்களா என்று பார்ப்பதை காண முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இன்றி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். சில வீடுகளில் பெண்கள் ஆண்களிடம் பணத்தை கொடுக்காததால் மதுபிரியர்கள் கவலையில் உள்ளனர். சிலர் மதுக்கடைகளில் மதுபானங்களை வாங்கி வைத்து உள்ளனர். மேலும் ஊரடங்கால் 40 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சட்ட விரோதமாக இந்த செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் சோதனை நடத்தி கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், மறைமுகமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் தினமும் சராசரியாக ரூ.2 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களில் ரூ.3 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
Related Tags :
Next Story