கொரோனா அச்சமின்றி முக கவசம் அணியாமல் சாலையில் நடமாடும் பொதுமக்கள்


கொரோனா அச்சமின்றி முக கவசம் அணியாமல் சாலையில் நடமாடும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 May 2020 4:30 AM IST (Updated: 19 May 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் நடமாடுகின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

வேலூர்,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்கள் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லும்போது தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். காரில் டிரைவரை தவிர 2 பேர் பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி முதல் வேலூர் உள்பட 25 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த 25 மாவட்டங்களுக்குள் செல்ல போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற தேவையில்லை. அத்தியாவசிய தேவைக்காக சொந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டன. மேலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

இதன்காரணமாக கடந்த 3 நாட்களாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக அண்ணாசாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலைகளில் ஏராளமானோர் செல்வதை காண முடிகிறது. அவர்களில் பலர் கொரோனா தொற்று குறித்த எவ்வித அச்சமின்றி முக கவசம் அணியாமல் நடமாடுகின்றனர். பல்வேறு கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தாக்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. முக கவசம் அணியாமல் சாலையில் நடமாடும் நபர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே முக கவசம் அணியாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Next Story