சென்னை குடிசைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியாற்ற 2,500 களப்பணியாளர்கள் நியமனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சென்னையில் உள்ள 2 ஆயிரம் குடிசைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியாற்ற 2,500 களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளை ஈடுபடுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 2 ஆயிரம் குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2,500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 30 வார்டுகளை தவிர, மற்றப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளை கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட சுமார் 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்திருந்தனர். சென்னையில் 1,979 குடிசைவாழ் பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் மொத்தம் 2 ஆயிரத்து 500 களப்பணியாளர்களும், 15 களப்பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 166 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒரு குழுவிற்கு ஒருவர் என 100 குழுவிற்கு 100 திட்டப்பணி மேலாளரும், 100 தகவல் மேலாளரும் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு களப்பணியாளரும், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று பாதித்த வீடுகளை கண்காணித்து, சரியான நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா? என கண்டறிந்து, பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
பொதுமக்களோடு களப்பணியாளர்கள் தொடர்பில் இருந்து நோய் தொற்று தொடர்பான ஆரம்ப நிலை அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளுக்கு அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லவும், மருத்துவர்களின் ஆலோசனைபடி, தேவைப்பட்டால் அறிகுறி உள்ள நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய மாநகராட்சி மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். இந்த களப்பணியாளர்கள் வருகிற 23-ந்தேதி முதல் களப்பணிகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்களை கண்காணித்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்ள்ளது.
Related Tags :
Next Story