கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2020 4:45 AM IST (Updated: 21 May 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் இந்தியன் வங்கி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிள் பதிவு எண் இல்லாமலும், மற்றொன்று பதிவு எண்ணுடனும் இருந்தது. போலீசார் வாகன சோதனையில் இருப்பதை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இதனை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் 2 மோட்டார் சைக்கிள்களில் முன்பக்கமாக தொங்க விடப்பட்டிருந்த துணிப்பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த துணிப்பையில் 4 நாட்டு வெடி குண்டுகளும், ஒரு கத்தியும் இருந்தது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த துணிப்பையில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதுகாப்புக்காக...

இதனையடுத்து 4 பேரையும் தொடர்ந்து விசாரித்தபோது அவர்கள் கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவை சேர்ந்த சூர்யா (வயது 23), கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (22), கூடுவாஞ்சேரி மசூதி தெருவை சேர்ந்த அருண் (22), அரக்கோணம் காந்தி நகர் பால் டெப்போ தெருவை சேர்ந்த பார்த்திபன் (22) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது சூர்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பொத்தேரி பகுதியை சேர்ந்த அப்துல் என்ற பட்டன் பாய்ஸ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்ய வெட்டியபோது அவர் சாகவில்லை. அவரது நண்பர் வைகோ என்கிற சந்துரு என்பவர் முன்விரோதத்தில் என்னை கொலை செய்து விடுவார் என்பதால் நான் என்னுடைய பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிளில் நாட்டு வெடி குண்டுகள், கத்தி வைத்து இருந்தேன். இவ்வாறு சூர்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வாகன சோதனையில் பிடிப்பட்ட சூர்யா, கமலக்கண்ணன், பார்த்திபன், அருண் ஆகியோர் மீது அரசால் தடைசெய்யப்பட்ட, எளிதில் தீப்பற்றக்கூடிய, உயிருக்கு சேதம் ஏற்படுத்த கூடிய வெடிபொருட்கள் வைத்திருந்த சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 7 நாட்டு வெடி குண்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story