ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 2 வாலிபர்கள் லாரி மோதி பலியானார்கள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராபிக் அகமது. அவருடைய மகன் செய்யது இப்ராகிம் (வயது 21). டிரைவர். கீழக்கரை சாலைத்தெருவை சேர்ந்தவர் சகுபர் சாதிக் மகன் அப்ரிதீன் (21). தற்போது ராமநாதபுரம் வைகை நகரில் குடியிருந்து வந்தார். இவர்கள் இருவரும் தினமும் ராமநாதபுரம் வந்து நண்பர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்து தொழுகை நடத்திவிட்டு ஊருக்கு திரும்பி செல்வது வழக்கம்.
இவ்வாறு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் கீழக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்புல்லாணி அருகே உப்பளம் பகுதியில் சென்றபோது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உரம் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை செல்வதற்காக ஒரு லாரி வந்தது.
2 பேர் பலி
அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற செய்யது இப்ராகிம், அப்ரிதீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பலியானவர்களின் உடல்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியான செய்யது இப்ராகிமின் தந்தை ராபிக் அகமது அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான புதுக்கோட்டை வர்த்தக ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சொரிமுத்துவை (27) கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story