தேனியில் இருந்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். அவர்களில் பலரும் விவசாய கூலித்தொழில், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களில் பலரும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக அந்த தொழிலாளர்கள் 24 பேரும் தேனியில் இருந்து திருச்சிக்கு சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர். முன்னதாக தேனியில் இருந்து புறப்பட்ட தொழிலாளர்களை வருவாய்த்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story