நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் அனைத்து முடிதிருத்தும் கடைகளும் திறப்பு - தொழிலாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினர்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து முடிதிருத்தும் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. தொழிலாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினர்.
தூத்துக்குடி,
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 19-ந் தேதி முதல் கிராம பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் கிராமங்களுக்கு சென்று முடிவெட்டி வந்தனர்.
பெரும்பாலான கடைகள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருந்ததால், அந்த கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நகர் பகுதியில் உள்ள முடி திருத்தும் கடைகளை திறக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகரில் உள்ள ஆயிரக்கணக்கான முடிதிருத்தும் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மாநகர பகுதியை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடைகளுக்கு சென்று தலை முடியை வெட்டிக்கொண்டனர். நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டன.
முடிதிருத்தும் கடைகளை திறக்கும்போது, கொரோனா பரவாமல் இருக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முடிவெட்டி கொள்ள வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். அவரவர் வீடுகளில் இருந்து துண்டு, வேட்டி கொண்டு வரச்செய்தனர். சிலருக்கு நேரம் ஒதுக்கீடு செய்து அந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை வரவழைத்து முடி வெட்டி, சேவிங் செய்து அனுப்பி வைத்தனர். வயதானவர்களுக்கு டை அடிக்கும் பணியும் நடைபெற்றது.
சில கடைகளில் துண்டு, வேட்டியை கடை உரிமையாளர்களை அதிகளவு வாங்கி வைத்திருந்தனர். ஒரு ஆளுக்கு ஒரு துண்டு என்ற அடிப்படையில் போர்த்தி முடி வெட்டப்பட்டது. இதையொட்டி அவர்களிடம் இருந்து முடி வெட்டுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் அரசு உத்தரவுப்படி கடைகள் முன்பு கை கழுவும் திரவம், சோப்பு ஆயில் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. முடி வெட்டும் தொழிலாளர்களும் கையுறை, முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 600 முடிதிருத்தும் கடைகள் உள்ளன. நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால், பெரும்பாலானவர்கள் காலையிலேயே கடையை திறந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். முடி வெட்ட வருபவர்களுக்கு மூடுவதற்கு புதிய துணிகளை பயன்படுத்தினர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் காலை யிலேயே சூடம் கொளுத்தி சாமி கும்பிட்டார்.
தொடர்ந்து கையுறை, முககவசம் மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான ஹெல்மெட் அணிந்தபடி முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டார். கடை முழுவதும் அவ்வப்போது, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தார். இதேபோன்று ஒவ்வொரு கடைக்கும் வருகிறவர்கள் பெயர் விவரங்களை ஒரு நோட்டில் பதிவு செய்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 1,200 முடி திருத்தும் கடைகள் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள 480 கடைகள் திறக்கப்பட்டன. மீதி உள்ள அனைத்து கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன.
இந்த கடைகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கைகளில் உறைகள் மற்றும் முககவசம் அணிந்து பணியாற்றினார்கள். வாடிக்கையாளர்களும் முககவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு இந்த கடைகள் இயங்கின.
Related Tags :
Next Story