விருத்தாசலம் பகுதிக்கு வந்த தந்தை, மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி


விருத்தாசலம் பகுதிக்கு வந்த தந்தை, மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி
x

கர்நாடக மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்த தந்தை, மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர் களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 423 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 110 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து விருத்தாசலம் பகுதிக்கு வந்தவர்களில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மங்களூர் பகுதிக்கு வந்த தந்தை, அவரது மகளான 9 வயது சிறுமி , சென்னை எழும்பூரில் இருந்து கம்மாபுரம் பகுதிக்கு வந்த பெண் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இது வரை 412 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இது வரை 10 ஆயிரத்து 810 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில், 427 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.9 ஆயிரத்து 977 பேருக்கு பாதிப்பு இல்லை. 406 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். நேற்று 27 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 433 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story