காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயிலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 1,564 பேர் மால்டா நகருக்கு அனுப்பி வைப்பு


காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயிலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 1,564 பேர் மால்டா நகருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 27 May 2020 5:24 AM IST (Updated: 27 May 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயிலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 1,564 பேர் மால்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்பாடி, 

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முடங்கிய வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலமாக அவரவர் சொந்த மாநிலங்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 6-ந்தேதி முதல், காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலமாக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 பேர் 10 கட்டமாக அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

11-வது கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலூரில் இருந்து 1160 பேர், ராணிப்பேட்டையில் இருந்து 404 பேர் என மொத்தம் 1,564 பேர் நேற்று காட்பாடியில் இருந்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பும் பணி நடந்தது. வேலூர், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு, அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அங்குத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிறப்பு ரெயில் பெட்டியில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் 1,564 பேரை மால்டா நகருக்கு வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

அப்போது உதவி கலெக்டர்கள் கணேஷ், இளம்பகவத், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

Next Story